சமூக பரவலுக்குள் நுழையும் தமிழகம் : மருத்துவரின் 5 பாதுகாப்பு ஆலோசனைகள் - ஆசிரியர் மலர்

Latest

 




 


13/04/2020

சமூக பரவலுக்குள் நுழையும் தமிழகம் : மருத்துவரின் 5 பாதுகாப்பு ஆலோசனைகள்


கொரோனா தொற்றில் தமிழகம் இரண்டாம் நிலையிலிருந்து மூன்றாவது நிலையான சமூகப் பரவலுக்குள் செல்ல வாய்ப்புள்ளது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறிப்பளித்துள்ளார்.


நோய்ப் பரவல்

இதற்கு வலு சேர்ப்பதுபோல் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் சார்பில் நடைபெற்ற ஆய்வு முடிவு வெள்ளிக்கிழமை வெளியானது. தீவிர சுவாசக்கோளாறு உள்ள 5,911 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 104 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 40 பேர் வெளிநாடு சென்று வந்ததற்கான வரலாறு உள்ளவர்களோ, நோய் பாதித்தவர்களின் தொடர்பிலிருந்தவர்களோ கிடையாது. அப்படியென்றால் சமூகப் பரவல் மூலமாகவே இவர்களுக்கு நோய் பாதித்துள்ளது என்று அறிந்துகொள்ள வேண்டும்.


Infectious disease expert Dr.Sureshkumar

இந்நிலையில் சமூகப் பரவலுக்குள் நுழையும் நிலையில் அரசும் தமிழகமும் பின்பற்ற வேண்டிய 5 ஆலோசனைகளை விளக்குகிறார் தொற்றுநோய் மருத்துவர் சுரேஷ் குமார்:

அதிகம் பரிசோதனை



Covid-19 test

நோய் பரவுவதற்கான வாய்ப்புள்ளவர்களை க்வாரன்டீன் செய்து கண்காணித்து வருகின்றனர். அவ்வாறு க்வாரன்டீன் செய்யப்பட்டவர்களிடம் பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும். அப்போதுதான் நிஜமாகவே மூன்றாம் நிலைக்குள் சென்றுவிட்டோமா என்ற முடிவுக்கு வர முடியும்.
பரிசோதனையை அதிகப்படுத்தாமல் நாம் எந்த நிலைக்குள் இருக்கிறோம் என்ற சரியான முடிவுக்கு வர முடியாது.
சமூகப் பரவலுக்குள் நுழைந்துவிட்டோம் என்று உறுதியாகத் தெரிந்த பிறகு, அதே நிலையிலிருக்கும் பிற நாடுகளில் என்னென்ன வழிமுறைகளைக் கையாண்டார்கள் என்பதை நாமும் பின்பற்ற வேண்டும்.

நீட்டிக்கப்பட வேண்டிய ஊரடங்கு



Curfew

சீனாவில் நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட வுகான் மாகாணத்தில் 74 நாள்கள் ஊரடங்கு பின்பற்றப்பட்டு, தற்போது நோய் பாதிப்பு குறைந்த பிறகுதான் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இன்னும் மூன்று அல்லது நான்கு வாரங்கள் ஊரடங்கை அதிகரித்தால் பாதிப்பு குறைய (Flatten the curve) வாய்ப்புள்ளது.
இத்தாலி போன்ற நாடுகளில் நீண்ட நாள்கள் அமல்படுத்தப்பட்டாலும் சமூகத்துக்கான அனைத்து அத்தாயவசியத் தேவைகளையும் நிறைவேற்ற முடிந்தது. இந்தியாவில் 21 நாள்கள் ஊரடங்கு முடிவதற்கு முன்னரே, பலர் சிரமப்படத் தொடங்கவிட்டனர். அதனால் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், நடுத்தர வர்க்கத்தினருக்குத் தேவையான உதவிகளைச் செய்ய சாத்தியம் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.

மிதமான பாதிப்பு



Mild infection

தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் மிதமான அறிகுறிகளுடன்தான் அதிகம் பேர் இருக்கின்றனர். குறைவான எண்ணிக்கையில் பாதிப்பு இருப்பதால் மிதமான பாதிப்புள்ளவர்கள் அனைவரையும் மருத்துவமனையில் வைத்துக் கண்காணிக்கின்றனர்.
சமூகப்பரவல் அதிகரிக்கும் நிலையில் மிதமான பாதிப்பு உள்ளவர்கள், அதாவது கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என்று வரும், ஆனால் அறிகுறிகள் இருக்காது… என்ற நிலையில் இருப்பவர்களை வீட்டிலேயே அல்லது மருத்துவமனை அல்லாத வேறு கட்டடங்களில் வைத்துக் கண்காணிக்க வேண்டும்.
அப்போதுதான் தீவிர பாதிப்புள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்க முடியும்.

அனைவருக்கும் முகக்கவசம்



Mask for all

சமூகப் பரவல் தொடங்கிவிட்டால் யாருக்கு நோய் இருக்கிறது யாருக்கு நோய் இல்லை என்பது தெரியாது. இதனால் நோய் பாதிப்பு உள்ளவர்கள் மேலும் அதிகமானவர்களுக்கு நோயைப் பரப்பக்கூடும். இதற்கு முன்னால் அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டும் முகக்கவசம் அணிந்தால் போதும் என்று அறிவுறுத்தினோம்.
சமூகப் பரவல் உறுதி செய்யப்பட்டுவிட்டால் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிவதுதான் நல்லது.
கைகழுவுவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது, தனி மனித சுகாதாரம் போன்ற செயல்களை மேலும் தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

வெளியே செல்வதைக் குறைக்க வேண்டும்



stay home


அத்தியாவசியத் தேவைகளுக்கு வெளியே
செல்லும் எண்ணிக்கையையும் குறைத்துக்கொள்ள வேண்டும். ஒரு வாரம் அல்லது 10 நாள்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். வீட்டிலிருக்கும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வெளியே செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
வீட்டிலிருந்து எப்போதும் ஒருவர் மட்டுமே வெளியில் சென்று தேவையானவற்றை வாங்கி வர வேண்டும். அருகிலிருக்கும் சூப்பர் மார்க்கெட், மளிகைக் கடைகளில் பட்டியல் கொடுத்துவிட்டு அவர்களை வீட்டிலேயே கொண்டு வந்து டெலிவரி செய்யுமாறு கேட்க வேண்டும்.
பணத்தை ஆன்லைன் பரிமாற்றத்தின் மூலம் செலுத்தலாம்.
மக்கள் எந்த காரணத்துக்காக அடிக்கடி வெளியில் வருகிறார்கள் என்பதைக் கண்டறிய வேண்டும். அதற்கான மாற்று வழி என்ன என்பதைக் கண்டறிந்து அரசு அமல்படுத்த வேண்டும். மருத்துவர்கள் ஆலோசனையைப் பெற டெலிமெடிசின் முறையைப் பயன்படுத்த வேண்டும். அவசர சிகிச்சைக்காக மட்டும் மருத்துவமனையை அணுக வேண்டும்” என்றார்.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459