புதுடெல்லி:
கொரோனா வைரஸ் உலக நாடுகளின் பொருளாதாரத்தை அடியோடு முடக்கி உள்ளது. அனைத்து முன்னணி நிறுவனங்களின் பங்குகளும் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளன. மியூச்சுவல் பண்ட் திட்டங்களிலும் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு 50,000 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பிராங்ளின் டெம்பிள்டன் (franklin templeton) நிறுவனம் 6 திட்டங்களை முடக்கியதையடுத்து, நிலைமையை ஆராய்ந்த ரிசர்வ் வங்கி, மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க இந்த கடனுதவியை அறிவித்துள்ளது. நிலையான ரெப்போ விகிதத்தில் 90 நாட்கள் ரெப்போ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் கூறி உள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பை முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் வரவேற்றுள்ளார். மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு இந்த கடனுதவியை அறவித்தது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறி உள்ளார்.