கொரோனா தடுப்பு பணிகளில் ஒன்றாக மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் அதற்குள் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டிருப்பதால், மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியே செல்லலாம் என்ற தளர்வை பயன்படுத்தி பலர் காரணமே இல்லாமல் சாலைகளில் சுற்றித்திரிகின்றனர். அவர்கள் மீது அந்தந்த மாநில போலீஸார் வழக்குப்பதிவு செய்வது, வாகனங்களை பறிமுதல் செய்வது, அபராதம் விதிப்பது என அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர்.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் ஊரடங்கை மீறுபவர்களை அடைப்பதற்காகவே மாநிலம் முழுவதும் 34 தற்காலிக சிறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஊரடங்கை மீறுபவர்கள் இங்கு அடைக்கப்பட்டுவருகின்றனர். இந்த தற்காலிக சிறைகளில் இதுவரை 156 வெளிநாட்டினர், 132 இந்தியர்கள் என மொத்தம் 288 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.
மலேசியா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், வங்கதேசம், இந்தோனேஷியா,
சூடான், தாய்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த 156 பேர் ஊரடங்கை மீறியதற்காக கைது செய்யப்பட்டு இந்த தற்காலிக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22 ஆரயித்தை நெருங்கிய நிலையில், உத்தர பிரதேசத்தில் 1449 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.