தமிழகத்தில் கொரோனாவிற்கு முதல் பலி மதுரையில் பலியானவர் பற்றிய உருக்கமான தகவல்கள் - ஆசிரியர் மலர்

Latest

 




 


25/03/2020

தமிழகத்தில் கொரோனாவிற்கு முதல் பலி மதுரையில் பலியானவர் பற்றிய உருக்கமான தகவல்கள்



மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 54 வயது நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவிற்கு முதல் பலி பதிவாகியுள்ளது.
கொரோனா தொற்று தற்போது இந்தியாவில் மிக தீவிரமாக பரவி வருகிறது. இதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, இன்று (மார்ச் 25ம் தேதி) முதல் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு, இந்தியாவில் இதுவரை 10 பேர் பலியாகியுள்ள நிலையில், தமிழகத்தில் முதல் பலி, மதுரையில் நிகழ்ந்துள்ளது.
மதுரை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 54 வயதான நபருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர் பாதிப்புள்ள நாடுகளுக்கோ, மாநிலங்களுக்கோ செல்லாதவர். இருப்பினும் இவருக்கு பாதிப்பு ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.. சமூகப்பரவல் ஆன பிறகு தான் பிற நாடுகளில் கொரோனா மின்னல் வேகமெடுத்தது. அதுபோன்ற ஒரு நிலையை தமிழகமும் சந்திக்கும் அபாயகர சூழல் உருவானது.
முதல் பலி: பாதிக்கப்பட்டவருக்கு மதுரை அரசு மருத்துவமனை தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அவருக்கு சி.ஓ.பி.டி., (நாள்பட்ட நுரையீரல் நோய்), சர்க்கரை வியாதி உள்ளிட்ட பாதிப்புகள் இருப்பதால், நிலைமை கவலைக்கிடமாகி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி, 24ம் தேதி நள்ளிரவில் அவர் உயிரிழந்தார். இதன் மூலம் தமிழகம் கொரோனாவுக்கு முதல் பலியை பதிவு செய்துள்ளது.
பரவியது எப்படி? : இதற்கிடையே அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கொரோனா பாதித்திருக்கும்
வாய்ப்புள்ளதால், இது பற்றிய விசாரணையில் சுகாதார, வருவாய், போலீஸ், மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்டவர் ஒரு கட்டட கான்டிராக்டர். அதே பகுதியில் உள்ள ஒரு மசூதியில் நிர்வாகியாக உள்ளார். அடிக்கடி மசூதிக்கு சென்று வந்துள்ளார். அந்தவகையில், அவர் சந்தித்த நபர்கள், நெருங்கி பழகிய பக்கத்து வீட்டுக்காரர்களை அதிகாரிகள் அடையாளம் கண்டனர்.
பக்கத்து வீட்டில் 60 பேர் பங்கேற்ற விழாவிற்கும் அவர் சென்றுள்ளார். அங்கு அவருடன் தொடர்பில் இருந்த அத்தனை பேரும்
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 30 வீடுகள் சுகாதாரத்துறை கண்காணிப்பில் வந்துள்ளது. அங்கு அடையாள ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவரின் மனைவி, மகனும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ரத்த, தொண்டைச்சளி மாதிரி எடுத்து கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. அவர்கள் வசிக்கும் தெருப்பகுதி, மசூதி, இதர பகுதிகளில் நேற்று கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
இந்நிலையில்,
யார் மூலம் இவருக்கு பாதிப்பு ஏற்பட்டது என்பதே கண்டறியப்படாத நிலையில், இன்னும் யாருக்கெல்லாம் அந்நபர் கொரோனாவை பரப்பியுள்ளாரோ என்ற அச்சம் தொற்றியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459