நீடிக்கும் பள்ளி தேர்வுகள் குழப்பம்...தெளிவுபடுத்துமா பள்ளிக்கல்வித்துறை - ஆசிரியர் மலர்

Latest

 




 


21/03/2020

நீடிக்கும் பள்ளி தேர்வுகள் குழப்பம்...தெளிவுபடுத்துமா பள்ளிக்கல்வித்துறை


School Exams : கொரோனா வைரஸ் தாக்குதல் வேலைக்குச் செல்பவர்கள், சுய தொழில் செய்பவர்கள், தினக்கூலி ஆட்கள், பள்ளி மாணவர்கள் என அனைத்துத் தரப்பு மக்களையும் வெகுவாக பாதித்துள்ளது. இந்தத் தொற்றால், அனைவரும் வீட்டுக்குள் முடங்கியிருக்கும் சூழல் உருவாகியுள்ளது. ஒருவரிடமிருந்து மற்றவருக்கு எளிதில் பரவி விடும் என்பதால் சமூக விலகியிருத்தல் (சோஷியல் டிஸ்டன்ஸ்) தான், கொரோனாவை பரவாமல் தடுக்க முக்கியமான வழி. ஆகையால் தான் அவசியமற்ற பயணங்களையும், கூட்டங்களையும் தவிர்க்குமாறு அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் தங்களுக்கு பொது / ஆண்டுத் தேர்வுகள் நடக்குமா இல்லையா என்ற குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள் பள்ளி மாணவர்கள். கொரோனாவின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறையளிக்கப்பட்டிருக்கிறது. இதில் 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஓரிரு தேர்வுகள் மட்டுமே பேலன்ஸ் உள்ளன. அந்தத் தேர்வுகள் அறிவித்த அட்டவனையின்படி நடக்குமா? அல்லது மார்ச் 31-க்குப் பிறகு ஒத்தி வைக்கப்படுமா என்ற கேள்வி எழுகிறது. இதற்கிடையே நேற்று உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், அலுவலக மேலாண்மை, அடிப்படை மின்னணுவியல் மற்றும் என்ஜினீயரிங் ஆகிய பாடங்களுக்கான பிளஸ் 2 தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஒவ்வொரு பாடத்தையும், ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 – 150 மாணவர்கள் எழுதவில்லை.
பத்தாம் வகுப்பு மார்ச் 27-ம் தேதி பொதுத் தேர்வு தொடங்குகிறது. இதனை 10 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதுகிறார்கள். அரசு விதித்திருக்கும் காலக்கெடுவான மார்ச் 31-க்குள் இந்த பத்தாம் வகுப்பு தேர்வு தேதியும் வருவதால், அறிவிக்கப்பட்டபடி தேர்வு நடைபெறுமா அல்லது ஏப்ரல் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்படுமா என்ற குழப்பத்தில் மாணவர்களும், பெற்றோர்களும் ஆழ்ந்திருக்கிறார்கள். அதோடு ஒருவேளை கொரோனாவின் தாக்கம் ஏப்ரலிலும் தொடர்ந்தால், தேர்வு விஷயத்தில் அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்வை ஜூன் மாதத்திற்கு தள்ளி வைக்கவும், 11, 12-ம் வகுப்புக்கு எஞ்சியிருக்கும் தேர்வுகளை 2 வாரங்கள் தள்ளி வைக்கவும் ஆவண செய்யுமாறு ஆசிரியர் சங்கம், அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. ”பொதுத்தேர்வுகளை ஒத்தி வைக்கும்படி இதுவரை எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை என்ற பள்ளிக் கல்வித்துறை செயலர் தீரஜ்குமார், இனிவரும் சூழலைப் பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று கூறியிருக்கிறார்.
இதற்கிடையே, 1 முதல் 8-ம் வகுப்புக்கு தேர்வு இல்லாமலே ‘ஆல் பாஸ்’ என அறிவித்திருக்கிறது உத்திர பிரதேச அரசு. மகாராஷ்டிராவிலும் 8-ம் வகுப்பு வரையான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அந்த வகையில் ஏப்ரல் மாதத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை நடக்கும் ஆண்டுத் தேர்வுகள் தமிழகத்தில் எப்போதும் போல் நடைபெறுமா? அல்லது ஒத்தி வைக்கப்படுமா? இல்லை மற்ற மாநிலங்களைப் போல் ரத்து செய்யப்படுமா? என்ற பல்வேறு குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள் மாணவர்களும், பெற்றோர்களும். இதனை தெளிவுப் படுத்தும் தேவையை உணர்ந்து பள்ளிக் கல்வித்துறை செயல்பட்டால், சிறப்பாக இருக்கும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459