சென்னை:
வெளிமாநிலத்திலிருந்து வந்து தமிழகத்தில் தங்கியிருக்கும் தொழிலாளர்கள், மாணவர்களிடம் ஒரு மாத காலத்துக்கு வீட்டு வாடகை வாங்கக்கூடாது. வீட்டு வாடகை கேட்டு கட்டாயப்படுத்தும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் 201 நாடுகளில் பரவி 34 ஆயிரம் பேரை பலி கொண்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்களால், இந்தியாவிலும் கொரோனா பரவி 1,251 பேரை பாதித்துள்ளது. இதுவரை 34 பேர் பலியாகியுள்ளர். தமிழத்தை பொருத்தவரை இன்று 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் எண்ணிக்கை 67-லிருந்து 74-ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை ஒருவர் பலியாகியுள்ளார். இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மத்திய அரசு களம் இறங்கியுள்ளது. இந்நிலையில் வெளிமாநிலத்திலிருந்து வந்து தமிழகத்தில் தங்கியிருக்கும் தொழிலாளர்கள், மாணவர்களிடம் ஒரு மாத காலத்துக்கு வீட்டு வாடகை வாங்கக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தலைமை செயலாளர் சண்முகம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியதாவது; கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தினால் அத்தியாவசிய சேவையை தவிர மற்ற அனைத்தும் முடங்கியுள்ளது. இதனால் பலரும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால் வீட்டு வாடகை வசூலிக்க கூடாது என்ற கோரிக்கை எழுந்தது. தமிழகத்தில் புலம்பெயர்ந்து வந்தவர்களிடம் இருந்து வாடகை வசூல் செய்யக்கூடாது என்று வீட்டு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்கள். மீறி அவர்களிடம் வசூலித்தால் அவரிடம் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். அதே போல தமிழகத்தில்
உள்ள தொழிலாளர்களிடமும் வீட்டு உரிமையாளர் ஒருமாத வாடகையை கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது. அவர்களை வலுக்கட்டாயமாக அனுப்பவும் கூடாது. அதேபோல் அனைத்து நிறுவனங்களும் ஊதியம் பிடித்தம் செய்யாமல் முழுமையாக வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டெல்லி அரசு வாடகை கேட்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளநிலையில் தமிழகத்திலும் இது போன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.