🌹சிவகாசி:குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று. ஒவ்வொரு மனிதனும் ஏங்குவது மீண்டும் அவனது குழந்தை பருவத்திற்காக மட்டுமே.
🌹விளையாட்டாக இருந்தாலும் பல்வேறு போட்டிகளாக இருந்தாலும் குழந்தைகளுக்கு வெற்றி, தோல்வி பற்றி கவலை இல்லை. அவர்கள் பங்கேற்பதையே மிகவும் மகிழ்ச்சியாக உணர்வார்கள். எதை கற்றுக் கொடுத்தாலும் உடனடியாக அதை கற்றுக் கொள்வார்கள். எவ்வளவு கவலைகள் இருந்தாலும் சிறிது நேரம் குழந்தைகளோடு நேரம் செலவழித்தால் மொத்த கவலையும் மறந்து விடும். குழந்தை என்றாலே குதுாகலம்தான். பள்ளிகளில் குழந்தை களுக்கு கல்வியை மட்டுமே தொடர்ந்து கற்று கொடுத்தால் அவர்கள் விரக்தியடைந்து விடுவார்கள். அவர்களின் மனநிலைக்கு ஏற்ப பாடங்களை கற்று தர வேண்டும். இதனால்தான் பெரும்பாலான பள்ளிகளில் குழந்தைகளுக்கு விளையாட்டோடு பாடங்களையும் நடத்துவார்கள். குழந்தை பருவத்தில் கற்றுக்கொள்ளும் விஷயங்கள்தான் எதிர்காலத்தில் பிரதிபலிக்கும். அவர்களுக்கு நல்ல பழக்கங்களை கற்று கொடுக்க வேண்டும்.
🌹அந்தவகையில் குழந்தைகளை மகிழ்விக்க சிவகாசி அரிமா மழலையர் பள்ளியில் விளையாட்டு விழா நடத்தப்பட்டது. ஒவ்வொரு குழந்தையும் உற்சாகத்தோடு போட்டிகளில் பங்கேற்றனர். வண்ணத்துப்பூச்சி மற்றும் தேனீக்களாய் ஓடும் போட்டி, கிடார் மற்றும் பொம்மைகளுடன் ஓடுதல், சேமிப்பை வலியுறுத்தும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.
🌹இது தவிர உடல் ஆரோக்கியத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் உடலுக்கு தீங்கிழைக்கும் நொறுக்கு தீனிகள் ஒரு கையில், கேரட் மறு கையில் ஏந்தியபடி வேகமாக ஓடி வந்து நொறுக்கு தீனிகளை குப்பைதொட்டியில் இட்டு மீண்டும் எல்லையை தொட்ட விளையாட்டு ரசிக்க துாண்டியது. இதோடு குழந்தைகள் அழகு அழகாக உடையணிந்து நடனமாடியது பார்வையாளர்கள் கண்களுக்கு விருந்தளித்தது.
🌹இயல்பான நிலைக்கு மாற்றம்
🌹பள்ளியின் தனித்துவமான விளையாட்டு விழா, உடல் திறன், கவனம் சிதறாமை, தோழமை உணர்வு, தலைமைப் பண்பு, குழு ஒற்றுமை உன உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தேவையான நற்பண்புகளை குழந்தைகள் மனதில் பதிய வைப்பதற்காக போட்டி நடத்தப்பட்டது. இதனால் குழந்தைகளிடம் அச்சம் விலகி இயல்பான மன நிலைக்கு மாறுகின்றனர்.
-- கனகசபேசன், பள்ளி தாளாளர்.
🌹இவர்கள்தான் நாளைய தலைவர்கள்
🌹விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக பள்ளி குழந்தைகளுக்காக போட்டிகள் நடந்தது. இன்றயை குழந்தைகள் நாளைய தலைவர்களாக மாற இன்றியமையாதது விளையாட்டு. பல்வேறு விளையாட்டுகளில் அவர்களை பங்கேற்க வைத்து தனித்திறமைகளை வெளிக் கொணரவும் நல்ல சந்ததிகளை உருவாக்கவும் விளையாட்டு விழா நடத்தப்பட்டது.
- சுவாமிநாதன், பள்ளி முதல்வர்.
🌹வளரும் ஒற்றுமையுணர்வு
🌹ஓடி விளையாடு பாப்பா என்ற பாரதியின் வாக்கு படி குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர். தனி நபர் மற்றும் குழு போட்டிகளில் பங்கேற்று வெற்றி தோல்வியை சரிசமமாக எடுத்துக் கொண்டனர். விளையாட்டினால் குழந்தைகள் தற்போதே ஒற்றுமையுணர்வை வளர்த்து கொண்டனர். ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்கும் மனப்பான்மை ஏற்பட்டது.
- மெர்சி, ஆரம்ப பள்ளி பொறுப்பாசிரியை.
🌹உற்சாகம் தரும் விளையாட்டு
🌹கல்வி, விளையாட்டு இரண்டும் ஒரு குழந்தைக்கு இரு கண்கள் போன்றவை. இரண்டிற்கும் சம அளவில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கல்வியை மட்டுமே திணித்தால் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுவர். விளையாட்டுகள்தான் அவர்களை உற்சாகமாக வைத்திருக்க உதவுகிறது.
- ராஜகோபால், அரிமா சங்க தலைவர்.
No comments:
Post a Comment