டெஹ்ரான்: எரிசாராயம் குடித்தால் கரோனா குணமாகும் என்ற வதந்தியை நம்பி ஈரானில் எரிசாராயம் குடித்த 300 பேர் பலியாகியுள்ளனர் .
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 843 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக
அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 17 பேர் பலியாகியுள்ளனர்.
கரோனா வைரஸ் பாதிப்பினால் உலக அளவில் பலியானவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தொட்டது. இந்திய நேரப்படி இரவு எட்டு மணி அளவில் உலகம் முழுவதும் கரோனாவால் பாதிகப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,53,244 ஆகும்.அதேபோல பலியானவர்களின் எண்ணிக்கையில் 8,215 பேருடன் இத்தாலி முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஸ்பெயினில் 4,858 பேரும், சீனாவில் 3,174 பேரும் மரணமடைந்துள்ளனர்.
மத்திய கிழக்கு நாடான ஈரானில் இதுவரை 32,332 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 2,378 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் எரிசாராயம் குடித்தால் கரோனா குணமாகும் என்ற வதந்தியை நம்பி ஈரானில் எரிசாராயம் குடித்த 300 பேர் பலியாகியுள்ளனர் .
கரோனா வைரஸ் பரவும் அச்சத்தின் காரணமாகவும், போதுமான விழிப்புணர்வு இல்லாததாலும், ஈரானில் சமூகவலைதளங்களில் இதுதொடர்பாக அதிக அளவில் வதந்திகள் பரவுகிறது. மது குடித்தால் கரோனா தாக்காது என்பதும் அப்படி ஒரு வதந்தியாகும். அதனை நம்பி ஈரானில் ஏராளமான மக்கள் மெத்தனால் கலந்த எரிசாராயத்தைக் குடித்துள்ளனர்.
ஈரானிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி இதுவரை 300 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
மேலும் 1,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஈரானில் மது தடை செய்யப்பட்ட ஒன்று என்பதால் தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் எரிசாராயத்தை குடித்து உள்ளனர் என்பது வருந்தத்தக்கது.