HealthNEWS

மனித  குலத்தின் உயிருக்கு  உலை வைக்கும்  புற்றுநோய் : தமிழகத்தில் பலியானோர் எண்ணிக்கை இருமடங்காக அதிகரிப்பு 
*  மனித  குலத்தின் உயிருக்கு  உலை வைக்கும்  கொடிய நோய்
*  அறியாமைதான் அதிக உயிர் இழப்புகளுக்கு காரணம்

பூமிப்பந்தில் உயிர்களின் ஜனனம்.. அழகிய முன்னுரை வாழ்வின் நிறைவில் தழுவும் மரணம்… அழியாத முடிவுரை. தள்ளிச்சென்றாலும், அள்ளி அணைக்கும் கொடிய நோய்களே,இப்போது விதி என்ற பெயரில் முடிவுரை எழுதுவது துரத்தும் வேதனை.இந்தச் சூழலில் மிரட்டும் நோய்களின் வீரியம் குறைத்து, விரட்டியடிப்பதற்கான  விழிப்புணர்வு,அனைவருக்கும் அவசியமானது என்கின்றனர் நோய் தடுப்பு வல்லுநர்கள்.

இறைவன்  தந்த வாழ்வு ஆரோக்கியம் நிறைந்ததாய் இருக்க வேண்டும் என்பதே ஒவ்வொருவரின்  எதிர்பார்ப்பு.அதே நேரத்தில் நோய் தாக்குதல் ஏற்பட்டுவிட்டால் துவண்டுவிடாமல்  தைரியமாய் எதிர்கொள்ள வேண்டும்.


குறிப்பாக புற்றுநோய் வந்துவிட்டால்  வாழ்க்கை முடிந்து விட்டதாக எண்ணுவது தவறானது. நவீன மருத்துவமும்  தொழில்நுட்பமும் புற்றுநோயை கட்டுப்படுத்தி நம்மை மீட்கும் வழிமுறைகளை  காட்டியுள்ளது. புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வே நமது வாழ்க்கைக்கு  வழிகாட்டும் என்கின்றனர் நிபுணர்கள். இயந்திர மயமாகிவிட்ட இன்றைய வாழ்க்கைச் சூழலில்,தொற்றக்கூடிய நோய்கள் பலவற்றை முற்றிலுமாக அழித்து விட்டோம்.ஆனால்,தொற்றாத நோய்களான புற்றுநோய், நீரிழிவு, இதய நோய் போன்றவை முன்பை விட அதிகரித்துள்ளது. தாலுகாவுக்கு ஒருவர் புற்றுநோயால்  பாதிக்கப்பட்டிருந்த காலம் மாறி, தெருவுக்கு ஒருவராக அதிகரித்தது.தற்போது அக்கம் பக்கத்தில் ஒருவர் என்ற நிலையில் நிற்கிறோம். இந்தியாவில்  8ல் ஒரு  பெண்ணுக்கும்,9ல் ஒரு ஆணுக்கும் புற்றுநோய் இருப்பதாக  புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது. 1984ம் ஆண்டு புள்ளி விவரங்களின் படி,தமிழகத்தில் நுரையீரல் புற்றுநோய் 5வது இடத்தில் இருந்தது. இன்று அதுதான்  ஆண்களை பாதிக்கிற புற்றுநோய்களில் முதல் இடத்தில் உள்ளது. இது   மட்டுமின்றி புகையிலையால் உருவாகும்,வாய்,தொண்டை


புற்றுநோய் பாதிப்புகளும் கணிசமாக உள்ளது.

மதுப்பழக்கம்  உள்ளவர்களுக்கு கல்லீரல் மற்றும் வயிற்றுப்புற்று நோய் அபாயம் அதிகமாக  இருக்கிறது. பெண்களைப் பொறுத்த வரை மாதவிடாய்  நாட்களில் அந்தரங்க உறுப்புகளை சுத்தமாக வைத்துக்கொள்ளப்பழக வேண்டும்.  தரமான சானிட்டரி நாப்கின் உபயோகிக்க வேண்டும்.இதேபோல் மாறிப்போன உணவுப்பழக்கத்தால் வீட்டுச் சாப்பாடு என்பதே அரிதாகி விட்டது.  எண்ணெய்,கொழுப்பு,இனிப்பு போன்ற உணவுகளையும் துரித உணவுகளையும்  சாப்பிடுவதன் விளைவாக உடல் பருமன் அதிகரிக்கிறது. அதிக அளவு மாமிசம்  சாப்பிடுகிறவர்களுக்கு குடல் புற்றுநோய் வரும் என்றும் கூறப்படுகிறது. சுற்றுச்சூழல் இன்னொரு முக்கிய காரணம். வாகனங்கள்  உண்டாக்கும் புகை,அதனால் மாசடைகிற சுற்றுச்சூழலைவிட


அதிக பாதிப்பை  கொடுக்கும் விஷயம் ஒன்று உண்டு. அதுதான் புகைப்பழக்கம். புகைப்  பிடிப்பவர்களைவிட, அவர்களுக்குப் பக்கத்தில் இருக்கிற நபர்களுக்கு அந்தப்  புகையை சுவாசிப்பதால் ஏற்படுகிற விளைவுகள் அதிகமாக உள்ளது.  புகைப்பழக்கத்தை முற்றிலும் ஒழித்தால் புற்றுநோயின்  பாதிப்பை கணிசமாகக் குறைக்க முடியும். நாட்டின் மொத்த இறப்பு விகிதத்தில் 8.3 சதவீதம் புற்று நோயால் நிகழ்கிறது. தமிழகத்தில் 1990ம் ஆண்டை காட்டிலும் தற்போது,புற்றுநோயால் உயிரிழப்பவர் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது என்று அதிர வைக்கும் தகவல்கள் புள்ளி விபரங்களாக வெளியிடப்பட்டுள்ளது.

1955ல் இருந்த  சிகிச்சைகளுக்கும், இன்றைக்குக் கிடைக்கிற சிகிச்சைகளுக்கும் நிறைய  மாற்றங்கள், வளர்ச்சிகள், முன்னேற்றங்கள் வந்திருப்பதை மறுப்பதற்கில்லை.  புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்த மருந்துகள் உள்ளது என்பது ஒரு பெரிய  சாதனைதான்.


ஆனால்,இன்றைய சூழ்நிலையில் 3 நோயாளிகளில் ஒருவரைத்தான்  முழுமையாக குணப்படுத்த முடிகிறது. ஆரம்ப நிலையிலேயே வந்துவிட்டால் முழுமையாகக் குணப்படுத்தி விடலாம். ஆனால்  மக்களின் அறியாமையே இதற்கு தடையாக  இருக்கிறது. புற்றுநோயை பொறுத்தவரை  ஒருமுறை சிகிச்சை முடிந்து குணமானதும் அவ்வளவுதான் என இருந்துவிட  முடியாது. சில  வகையான புற்றுநோய்களுக்கு அடிக்கடி வர வேண்டியிருக்கும். தொடர்ச்சியான அந்த  சிகிச்சை செலவுகள் எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை.1950ம் ஆண்டுகளில் சிகிச்சை அளிக்க முடியாத நிலைகள் இன்று சாத்தியப்படுகின்றன.  ஏராளமான ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும்,  புதிய வகை மருந்துகளும் கருவிகளும் பயன்படுத்தப்படுகின்றன.  அதனாலேயே அவற்றின் விலையும் அதிகம். எனவே  புற்றுநோய் சிகிச்சைகளும்  மருந்துகளும் எல்லோருக்கும்


சாத்தியமாகிறபடி செய்ய வேண்டும்.  இருப்பவர்களிடம்  வாங்கி, இல்லாதவர்களுக்கு கொடுப்பது பொதுமக்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள்,அரசாங்கம் என எல்லோருக்குமான  பொறுப்பு என்கின்றனர் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள்.


Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *